பாரதியார் பாடல்கள்
குயில் தனது பூர்வ ஜன்மக் கதையுரைத்தல்
"தேவனே! என்னருமைச் செல்வமே! என்னுயிரே!
போவதன் முன்னொன்று புகல்வதனைக் கேட்டருள்வீர்!
முன்னம் ஒருநாள் முடிநீள் பொதியமலை
தன்னருகே நானும் தனியேயோர் சோலைதனில்
மாங்கிளையிலேதோ மனதிலெண்ணி வீற்றிருந்தேன். 5
ஆங்குவந்தார் ஓர்முனிவர் ஆரோ பெரியரென்று
பாதத்தில் வீழ்ந்து பரவினேன்; ஐயரெனை
ஆதரித்து வாழ்த்தி யருளினார், மற்றதன்பின்,
'வேத முனிவரே, மேதினியில் கீழ்ப்பறவைச்
சாதியிலே நான் பிறந்தேன், சாதிக் குயில்களைப்போல் 10
இல்லாமல், என்றன் இயற்கை பிரிவாகி,
எல்லார் மொழியும் எனக்கு விளங்குவதேன்?
மானுடர்போற் சித்தநிலை வாய்த்திருக்குஞ் செய்தியேன்?
யானுணரச் சொல்வீர்' என வணங்கிக் கேட்கையிலே,
கூறுகின்றார் ஐயர்: 'குயிலே! கேள், முற்பிறப்பில் 15
வீறுடைய வெந்தொழிலார்வேடர் குலத்தலைவன்
வீர முருகனெனும் வேடன் மகளாகச்
சேர வளநாட்டில் தென்புறத்தே ஓர்மலையில்
வந்து பிறந்து வளர்ந்தாய் நீ, நல்லிளமை
முந்து மழகினிலே மூன்றுதமிழ் நாட்டில் 20
யாரும் நினக்கோர் இணையில்லை என்றிடவே
சீருயர நின்றாய்; செழுங்கான வேடரிலுன்
மாமன் மகனொருவன் மாடனெனும் பேர்கொண்டான்
காமன் கணைக்கிரையாய், நின்னழகைக் கண்டுருகி,
நின்னை மணக்க நெடுநாள் விரும்பி, அவன் 25
பொன்னை மலரைப் புதுத்தேனைக் கொண்டுனக்கு
நித்தம் கொடுத்து நினைவெல்லாம் நீயாகச்
சித்தம் வருந்துகையில், தேமொழியே, நீயவனை
மாலையிட வாக்களித்தாய்; மையலினா லில்லை; அவன்
சால வருந்தல் சகிக்காமல் சொல்லிவிட்டாய். 30
ஆயிழையே, நின்றன், அழகின் பெருங்கீர்த்தி
தேயமெங்குந் தான்பரவத் தேன்மலையின் சார்பினிலோர்
வேடர்கோன், செல்வமும், நல்வீரமுமே தானுடையான்,
நாடனைத்தும் அஞ்சி நடுங்குஞ் செயலுடயான்,
மொட்டைப் புலியனுந்தன மூத்த மகனான 35
நெட்டைக் குரங்கனுக்கு நேரான பெண்வேண்டி,
நின்னை மணம்புரிய நிச்சயித்து, நின்னப்பன்
தன்னை யணுகி, "நின்னோர் தையலையென் பிள்ளைக்குக்
கண்ணாலஞ் செய்யும் கருத்துடையேன்" என்றிடலும்,
எண்ணாப் பெருமகிழ்ச்சி எய்தியே, நின்தந்தை 40
ஆங்கே உடம்பட்டான்; ஆறிரண்டு நாட்களிலே
பாங்கா மணம்புரியத் தாமுறுதி பண்ணிவிட்டார்.
பன்னிரண்டு நாட்களிலே பாவையுனைத் தேன்மலையில்
அன்னியன்கொண் டேகிடுவான் என்னும் அதுகேட்டு,
மாடன் மனம்புகைந்து மற்றைநாள் உன்னை வந்து 45
நாடிச் சினத்துடனே நானா மொழிகூற
நீயும் அவனிடத்தே நீண்ட கருணையினால்,
"காயுஞ் சினந்தவிர்ப்பாய் மாடா, கடுமையினால்
நெட்டைக் குரங்கனுக்குப் பெண்டாக நேர்ந்தாலும்,
கட்டுப் படிஅவர்தங் காவலிற்போய் வாழ்ந்தாலும் 50
மாதமொரு மூன்றில் மருமம் சிலசெய்து,
பேதம் விளைவித்துப் பின்னிங்கே வந்திடுவேன்;
தாலிதனை மீட்டுமவர் தங்களிடமே கொடுத்து
நாலிரண்டு மாதத்தே நாயகனா நின்றனையே
பெற்றிடுவேன்; நின்னிடத்தே பேச்சுத் தவறுவனோ? 55
மற்றிதனை நம்பிடுவாய் மாடப்பா" என்றுரைத்தாய்,
காதலினா லில்லை, கருணையினால் இஃதுரைத்தாய்.
(மாதரசாய், வேடன் மகளான முற்பிறப்பில்,
சின்னக் குயிலியென்று செப்பிடுவார் நின்நாமம்.)
பின்னர்ச் சிலதினங்கள் சென்றதன்பின் பெண்குயிலி, 60
நின்னொத்த தோழியரும் நீயுமொரு மாலையிலே
மின்னற் கொடிகள் விளையாடு தல்போலே,
காட்டி னிடையே களித்தாடி நிற்கையிலே,
வேட்டைக் கெனவந்தான் வெல்வேந்தன் சேரமான்
தன்னருமை மைந்தன்; தனியே, துணைபிரிந்து, 65
மன்னவன்றன் மைந்தனொரு மானைத் தொடர்ந்துவரத்
தோழியரும் நீயும் தொகுத்துநின்றே ஆடுவதை
வாழியவன் கண்டுவிட்டான். மையல் கரைகடந்து
நின்னைத் தனக்காக நிச்சயித்தான்; மாதுநீ
மன்னவனைக் கண்டவுடன் மாமோகங் கொண்டுவிட்டாய் 70
நின்னையவன் நோக்கினான்; நீயவனை நோக்கி நின்றாய்;
அன்னதொரு நோக்கினிலே ஆவி கலந்துவிட்டீர்;
தோழியரும் வேந்தன் சுடர்க்கோலந் தான்கண்டே
ஆழியரசன் அரும்புதல்வன் போலு மென்றே
அஞ்சி மறைந்து விட்டார். ஆங்கவனும் நின்னிடத்தே. 75
"வஞ்சித் தலைவன் மகன்யான்" எனவுரைத்து
"வேடர் தவமகளே! விந்தை யழகுடையாய்!
ஆடவனாத் தோன்றி யதன்பயனை இன்றுபெற்றேன்;
கண்டதுமே நின்மிசைநான் காதல்கொண்டேன்" என்றிசைக்க,
மண்டு பெருங்காதல் மனத்தடக்கி நீ மொழிவாய்; 80
"ஐயனே! உங்கள் அரண்மனையில் ஐந்நூறு
தையலருண்டாம்; அழகில் தன்னிகரில் லாதவராம்;
கல்வி தெரிந்தவராம்; கல்லுருகப் பாடுவராம்;
அன்னவரைச் சேர்ந்தேநீர் அன்புடனே வாழ்ந்திருப்பீர்;
மன்னவரை வேண்டேன், மலைக்குறவர் தம்மகள் யான்; 85
கொல்லு மடற்சிங்கம் குழிமுயலை வேட்பதுண்டோ?
வெல்லுதிறல் மாவேந்தர் வேடருள்ளோ பெண்ணெடுப்பார்?
பத்தினியா வாழ்வதல்லால் பார்வேந்தர் தாமெனினும்
நந்தி விலைமகளா நாங்கள்குடி போவதில்லை,
பொன்னடியைப் போற்றுகிறேன், போய்வருவீர், தோழியரும் 90
என்னைவிட்டுப் போயினரே, என்செய்கேன்?" என்றுநீ
நெஞ்சங் கலக்கமெய்தி நிற்கையிலே, வேந்தன் மகன்
மிஞ்சு நின்றன் காதல் விழிக்குறிப்பி னாலறிந்தே,
பக்கத்தில் வந்து பளிச்சென் றுனதுகன்னஞ்
செக்கச் சிவக்க முத்தமிட்டான், சினங்காட்டி 95
நீ விலகிச் சென்றாய் -நெறியேது காமியர்க்கே?
தாவி நின்னைவந்து தழுவினான் மார்பிறுக.
"நின்னையன்றி ஓர் பெண் நிலத்திலுண்டோ என்றனுக்கே?
பொன்னே, ஒளிர்மணியே, புத்தமுதே, இன்பமே,
நீயே மனையாட்டி, நீயே அரசாணி, 100
நீயே துணை எனக்கு. நீயே குலதெய்வம்
நின்னையன்றிப் பெண்ணை, நினைப்பேனோ?வீணிலே
எனனை நீ ஐயுறுதல் ஏதுக்காம்? இப்பொழுதே
நின்மனைக்குச் சென்றிடுவோம்; நின் வீட்டிலுள்ளோர்பால்
என்மனதைச் சொல்வேன், எனதுநிலை யுரைப்பேன். 105
வேத நெறியில் விவாகமுனைச் செய்துகொள்வேன்.
மாதரசே!" என்றுவலக் கைதட்டி வாக்களித்தான்.
பூரிப்புக் கொண்டாய் புளகம்நீ எய்திவிட்டாய்.
வாரிப் பெருந்திரைபோல் வந்த மகிழ்ச்சியிலே
நாணந் தவிர்த்தாய்; நனவே தவிர்ந்தவளாய் 110
காணத் தெவிட்டாதோர் இன்பக் கனவினிலே
சேர்ந்துவிட்டாய், மன்னன்றன் திண்டோ ளை நீயுவகை
ஆர்ந்து தழுவி அவனிதழில் தேன்பருகச்
சிந்தைகொண்டாய், வேந்தன்மகன் தேனில்வீழும்வண்டினைப்போல்
விந்தையுறு காந்தமிசை வீழும் இரும்பினைப்போல், 115
ஆவலுடன் நின்னை யறத்தழுவி, ஆங்குனது
கோவை யிதழ்பருகிக் கொண்டிருக்கும் வேளையிலே-
சற்றுமுன்னே ஊரினின்று தான்வந் திறங்கியவன்,
மற்றுநீ வீட்டைவிட்டு மாதருடன் காட்டினிலே
கூத்தினுக்குச் சென்றதனைக் கேட்டுக் குதூகலமாய் 120
ஆத்திரந்தான் மிஞ்சிநின்னை ஆங்கெய்திக் காணவந்தோன்
நெட்டைக் குரங்கன் நெருங்கிவந்து பார்த்துவிட்டான்.
"பட்டப் பகலிலே! பாவிமகள் செய்தியைப் பார்!
கண்ணாலங் கூடஇன்னுங் கட்டி முடியவில்லை
மண்ணாக்கி விட்டாள்! என் மானந் தொலைத்துவிட்டாள்! 125
'நிச்சய தாம்பூலம்' நிலையா நடந்திருக்கப்
பிச்சைச் சிறுக்கி செய்த பேதகத்தைப் பார்த்தாயோ?"
என்று மனதில் எழுகின்ற தீயுடனே
நின்று கலங்கினான் நெட்டைக் குரங்கனங்கே.
மாப்பிள்ளைதான் ஊருக்கு வந்ததையும், பெண்குயிலி, 130
தோப்பிலே தானுந்தன் தோழிகளு மாச்சென்று
பாடி விளையாடும் பண்புகேட் டேகுரங்கன்
ஓடி யிருப்பதோர் உண்மையையும் மாடனிடம்
யாரோ உரைத்துவிட்டார்; ஈரிரண்டு பாய்ச்சலிலே
நீரோடும் மேனி நெருப்போடுங் கண்ணுடனே 135
மாடனங்கு வந்து நின்றான். மற்றிதனைத் தேன்மலையின்
வேடர்கோன் மைந்தன் விழிகொண்டு பார்க்கவில்லை.
நெட்டைக் குரங்கனங்கு நீண்ட மரம்போலே
எட்டிநிற்குஞ் செய்தி இவன்பார்க்க நேரமில்லை.
அன்னியனைப் பெண்குயிலி ஆர்ந்திருக்குஞ் செய்தியொன்று 140
தன்னையே இவ்விருவர் தாங்கண்டார், வேறறியார்,
மாடனதைத் தான்கண்டான், மற்றவனும் அங்ஙனமே.
மாடன் வெறிகொண்டான், மற்றவனும் அவ்வாறே.
காவலன்றன் மைந்தனுமக் கன்னிகையும் தானுமங்கு
தேவசுகங் கொண்டு விழியே திறக்கவில்லை. 145
ஆவிக் கலப்பின் அமுத சுகந்தனிலே
மேவியங்கு மூடி யிருந்த விழிநான்கு.
ஆங்கவற்றைக் கண்டமையால் ஆவியிலே தீப்பற்றி
ஓங்கும் பொறிகள் உதிர்க்கும் விழிநான்கு.
மாடனுந்தன் வாளுருவி மன்னவனைக் கொன்றிடவே 150
ஓடிவந்தான்; நெட்டைக் குரங்கனும் வாளோங்கி வந்தான்;
வெட்டிரண்டு வீழ்ந்தனகாண் வேந்தன் முதுகினிலே,
சட்டெனவே மன்னவனும் தான்திரும்பி வாளுருவி
வீச்சிரண்டில் ஆங்கவரை வீழ்த்தினான்; வீழ்ந்தவர்தாம்
பேச்சிழந்தே ஆங்கு, பிணமாகக் கிடந்துவிட்டார். 155
மன்னவனும் சோர்வெய்தி மண்மேல் விழுந்துவிட்டான்.
பின்னவனை நீயும் பெருந்துயர்கொண் டேமடியில்
வாரி யெடுத்துவைத்து வாய்புலம்பக் கண்ணிரண்டும்
மாரி பொழிய மனமிழந்து நிற்கையிலே
கண்ணை விழித்துனது காவலனும் கூறுகின்றான். 160
"பெண்ணே, இனிநான் பிழைத்திடேன்; சிலகணத்தே
ஆவி துறப்பேன், அழுதோர் பயனில்லை,
சாவிலே துன்பமில்லை; தையலே, இன்னமும் நாம்
பூமியிலே தோன்றிடுவோம். பொன்னே, நினைக்கண்டு
காமுறுவேன்; நின்னைக் கலந்தினிது வாழ்ந்திடுவேன்; 165
இன்னும் பிறவியுண்டு; மாதரசே இன்பமுண்டு,
நின்னுடன் வாழ்வனினி நேரும் பிறப்பினிலே!"
என்று சொல்லிக் கண்மூடி, இன்பமுறு புன்னகைதான்
நின்று முகத்தே நிலவுதர, மாண்டனன்காண்.
மாடனிங்கு செய்ததோர் மாயத்தால் இப்பொழுது. 170
பீடையுறு புள்வடிவம் பேதையுனக் கெய்தியது.
வாழிநின்றன் மன்னவனும் தொண்டை வளநாட்டில்
ஆழிக் கரையின் அருகேயோர் பட்டினத்தில்
மானிடனாத் தோன்றி வளருகின்றான். நின்னையொரு
கானிடத்தே காண்பான். கனிந்துநீ பாடும்நல்ல 175
பாட்டினைத்தான் கேட்பான். பழவினையின் கட்டினால்
மீட்டு நின்மேற் காதல்கொள்வான், மென்குயிலே!" என்றந்தத்
தென் பொதியை மாமுனிவர் செப்பினார். "சாமீ,
குயிலுருவங் கொண்டேன்யான். கோமானோ மேன்மை
பயிலு மனிதவுருப் பற்றநின்றான், எம்முள்ளே 180
காதலிசைந் தாலும் கடிமணந்தான் கூடாதாம்
சாதற் பொழுதிலே தார்வேந்தன் கூறியசொல்
பொய்யாய் முடியாதோ?" என்றிசைத்தேன், புன்னகையில்
ஐயர் உரைப்பார்; "அடி பேதாய், இப்பிறவி
தன்னிலும் நீ விந்தகிரிச் சார்பினிலோர் வேடனுக்குக் 185
கன்னியெனத் தான்பிறந்தாய் கர்ம வசத்தினால்,
மாடன் குரங்கன் இருவருமே வன்பேயாக்
காடுமலை சுற்றி வருகையிலே கண்டுகொண்டார்
நின்னையங்கே, இப்பிறப்பில் நீயும் பழைமைபோல்
மன்னனையே சேர்வையென்று தாஞ்சூழ்ந்து மற்றவரும் 190
நின்னைக் குயிலாக்கி நீசெல்லுந் திக்கிலெலாம்
நின்னுடனே சுற்றுகின்றார் நீயிதனைத் தேர்கிலையோ?"
என்றார். "விதியே, இறந்தவர்தாம் வாழ்வாரை
நின்று துயருறுத்தல் நீதியோ? பேய்களெனைப்
பேதைப் படுத்திப் பிறப்பை மறப்புறுத்தி, 195
வாதைப் படுத்தி வருமாயின், யானெனது
காதலனைக் காணுங்கால், காய்சினத்தால் ஏதேனும்
தீதிழைத்தால் என்செய்வேன்? தேவரே, மற்றிதற்கோர்
மாற்றிலையோ?" என்று மறுகி நான் கேட்கையிலே,
தேற்றமுறு மாமுனிவர் செப்புகின்றார்:- 'பெண்குயிலே! 200
தொண்டைவள நாட்டிலோர் சோலையிலே வேந்தன்மகன்
கண்டுனது பாட்டில் கருத்திளகிக் காதல்கொண்டு
நேசம் மிகுதியுற்று நிற்கையிலே, பேயிரண்டும்
மோசம் மிகுந்த முழுமாயச் செய்கைபல
செய்துபல பொய்த்தோற்றங் காட்டித் திறல்வேந்தன் 205
ஐயமுறச் செய்துவிடும், ஆங்கவனும் நின்றனையே
வஞ்சகியென் றெண்ணி மதிமருண்டு நின்மீது
வெஞ்சினந்தான் எய்திநினை விட்டுவிட நிச்சயிப்பான்
பிந்தி விளைவதெல்லாம் பின்னேநீ கண்டு கொள்வாய்
சந்தி ஐபம் செய்யுஞ் சமயமாய்விட்ட' தென்றே 210
காற்றில் மறைந்து சென்றார் மாமுனிவர், காதலரே!
மாற்றி உரைக்கவில்லை, மாமுனிவர் சொன்னதெல்லாம்
அப்படியே சொல்லிவிட்டேன். ஐயா! திருவுளத்தில்
எப்படிநீர் கொள்வீரோ, யானறியேன், ஆரியரே!
காத லருள்புரிவீர், காதலில்லை யென்றிடிலோ, 215
சாத லருளி நுமது கையால் கொன்றிடுவீர்!"
என்று குயிலும் எனது கையில் வீழ்ந்ததுகாண்.
கொன்றுவிட மனந்தான் கொள்ளுமோ? பெண்ணென்றால்
பேயு மிரங்காதோ? பேய்கள் இரக்கமின்றி
மாயமிழைத் தாலதனை மானிடனுங் கொள்ளுவதோ? 220
காதலிலே ஐயம் கலந்தாலும் நிற்பதுண்டோ?
மாதரன்பு கூறில் மனமிளகார் இங்குளரோ?
அன்புடனே யானும் அருங்குயிலைக் கைக்கொண்டு
முன்புவைத்து நோக்கியபின் மூண்டுவரும் இன்பவெறி
கொண்டதனை முத்தமிட்டேன். கோகிலத்தைக் காணவில்லை. 225
விண்டுரைக்க மாட்டாத விந்தையடா! விந்தையடா!
ஆசைக் கடலின் அமுதடா! அற்புதத்தின்
தேசமடா! பெண்மைதான் தெய்விகமாம் காட்சியடா!
பெண்ணொருத்தி அங்குநின்றாள்; பேருவகை கொண்டுதான்
கண்ணெடுக்கா தென்னைக்கணப் பொழுது நோக்கினாள்; 230
சற்றே தலைகுனிந்தாள், சாமீ! இவளழகை
எற்றே தமிழில் இசைத்திடுவேன்? கண்ணிரண்டும்
ஆளை வீழுங்கும் அதிசயத்தைக் கூறுவனோ?
மீன விழியில் மிதந்த கவிதையெலாம்
சொல்லில் அகப்படுமோ? தூயசுடர் முத்தையொப்பாம் 235
பல்லில் கனியிதழில் பாய்ந்த நிலவினை யான்
என்றும் மறத்தல் இயலுமோ? பாரின் மிசை
நின்றதொரு மின்கொடிபோல் நேர்ந்தமணிப் பெண்ணரசின்
மேனி நலத்தினையும், வெட்டினையுங் கட்டினையும்,
தேனி லினியாள் திருத்த நிலையினையும், 240
மற்றவர்க்குச் சொல்ல வசமாமோ? ஓர் வார்த்தை
கற்றவர்க்குச் சொல்வேன். கவிதைக் கனிபிழிந்த
சாற்றினிலே, பண்கூத் தெனுமிவற்றின் சாரமெலாம்
ஏற்றி, அதனோடே, இன்னமுதைத் தான்கலந்து,
காதல் வெயிலிலே காயவைத்த கட்டியினால் 245
மாதவளின் மேனி வகுத்தான் பிரமெனென்பேன்.
பெண்ணவளைக் கண்டு பெருங்களிகொண்டாங்ஙனே
நண்ணித் தழுவி நறுங்கள் ளிதழினையே
முத்தமிட்டு முத்தமிட்டு மோகப் பெருமயக்கில்
சித்தம் மயங்கிச் சிலபோழ் திருந்த பின்னே, 250
பக்கத் திருந்தமணிப் பாவையுடன் சோலையெலாம்
ஒக்க மறைந்திடலும், ஓஹோ! எனக்கதறி
வீழ்ந்தேன். பிறகு விழிதிறந்து பார்க்கையிலே
சூழ்ந்திருக்கும் பண்டைச் சுவடி, எழுதுகோல்,
பத்திரிகைக் கூட்டம், பழம்பாய்-வரிசை யெல்லாம் 255
ஒத்திருக்க 'நாம் வீட்டில் உள்ளோம்' எனவுணர்ந்தேன்.
சோலை, குயில், காதல், சொன்னகதை யத்தனையும்,
மாலை யழகின் மயக்கத்தால் உள்ளத்தே
தோன்றியதோர் கற்பனையின் சூழ்ச்சியென்றே கண்டுகொண்டேன்.
ஆன்ற தமிழ்ப் புலவீர், கற்பனையே யானாலும், 260
வேதாந்த மாக விரித்துப் பொருளுரைக்க
யாதானுஞ் சற்றே இடமிருந்தாற் கூறீரோ?