கண்ணீரின்'s image
0839

கண்ணீரின்

ShareBookmarks

கண்ணீரின் ரகசியம்
’இறைவா எனக்குப்
புன்னகைகளைக் கொடு’ என்று
பிரார்த்தித்தேன்
அவன் கண்ணீரைத் தந்தான்
‘வரம் கேட்டேன்
சாபம் கொடுத்து விட்டாயே’
என்றேன்
இறைவன் கூறினான்:
‘மழை வெண்டாம்
விளைச்சலை மட்டும் கொடு’ என்று
எந்த உழவனாவது கேட்பானா’
ஆனால் நீ
அப்படித்தான் கேட்கிறாய்
கண்ணிரில் புன்னகையும்
புன்னகையில் கண்ணீரும்
ஒளிந்திருப்பதை
நீ அறிய மாட்டாய்
உண்மையைச் சொல்வதானால்
கண்ணீர் கண்களின் புன்னகை
புன்னகை இதழ்களின் கண்ணீர்’
வைகறைப் பொழுதில் மலர்களின் மீது
பனித்துளிகளை
நீ கண்டதில்லையா?
புன்னகை
தன்னைக் கண்ணீரால்
அலங்கரித்துக் கொள்ளும்
அற்புதம் அல்லவா அது!
மழை மேகங்களில்
மின்னல் உதிப்பதை
நீ பார்த்ததில்லையா?
கண்ணீரில் இருந்து
சிரிப்புப் பிறக்கும்
அழகல்லவா அது?
முத்து என்பது என்ன?
சிப்பிக்குள் இருந்து
தவம் செய்யும் கண்ணீர்த் துளி
புன்னகையாகும் அதிசயம் தானே அது
கன்ணீரில் மலரும்
புன்னகைப் பூக்கள்
வாடுவதில்லை என்பதை
அறிவாயாக!
மேலும்
கண்ணீர்தான்
உன்னைக் காட்டுகிறது
புன்னகையோ
சில நேரங்களில்
உனக்கு திரையாகிவிடுகிறது

 

Read More! Learn More!

Sootradhar