சும்மா's image
0310

சும்மா

ShareBookmarks

சும்மா கெடந்த நிலத்தைக் கொத்திச்
சோம்பலில்லாமே ஏர் நடத்தி
கம்மாக் கரையை ஒசத்திக்கட்டி
கரும்புக் கொல்லையில் வாய்க்கால் வெட்டி
சம்பாப் பயிரைப் புடுங்கி நட்டுத்
தகுந்த முறையில் தண்ணீர் விட்டு

நெல்லு வெளைஞ்சிருக்கு - வரப்பும்
உள்ளே மறைஞ்சிருக்கு

மண்ணைக் கிளறிக் குழியமைச்சு
வாழைக் கன்னுகளை ஊடாலே வச்சு
தண்ணி பெற அக்களை பறிச்சுச்
சந்திர சூரியர் காண ஒழைச்சு
ஒண்ணுக்கு பத்தாக் கிளைவெடிச்சு
கண்ணுக் கழகா நிண்ணு தழைச்சு

இலை விரிஞ்சிருக்கு - காய்க்
குலை சரிஞ்சிருக்கு

பெண்:

வாழை நிலைக்குது சோலை தழைக்குது
ஏழைகளுக்கதில் என்ன கிடைக்குது?

கூழைக் குடிக்குது; நாளைக் கழிக்குது
ஓலைக் குடிசையில் ஒட்டிக் கிடக்குது
காடு வெளைஞ்சென்ன மச்சான் - உழைப்போர்க்கு
கையுங்காலுந்தானே மிச்சம்?

ஆண்:

நாடு செழிச்சிட மாடா ஒழைச்சவன்
நாத்துப் பறிச்சவன், ஏத்தம் எறைச்சவன்
மூடாத மேனியும் ஓடா எளச்சவன்
போடா விதைகளும் போட்டு வளர்த்தவன்
அரை வயித்து கஞ்சி குடிக்கிறான் - சிலநாள்
அதுவுங் கிடைக்காமத் துடிக்கிறான்

பெண்:

மாடா உழைச்சவன் வீட்டினிலே - பசி
வந்திடக் காரணம் என்ன மச்சான்?

ஆண்:

அவன் தேடிய செல்வங்கள் சீமான் வீட்டினிலே
சேர்ந்ததினால் வந்த தொல்லையடி

பெண்:

பஞ்சைப் பரம்பரை வாழ்வதற்கு - இனிப்
பண்ண வேண்டியது என்ன மச்சான்?

ஆண்:

தினம்-
கெஞ்சிக் கிடப்பதில் பஞ்சந் தெளியாது
தஞ்சம் துணிஞ்சிட வேணுமடி

பெண்:

சிறும் புயலால் மெலிந்தவருக்குச் - சர்க்கார்
செஞ்ச உதவிகள் என்ன மச்சான்?

ஆண்:

அங்கு-
நாளும் பிணத்தைப் புதைப்பதற்கு - நம்ம
நாணய சர்க்கார் உதவுமடி

பெண்:

தங்கவும் வீடின்றித் திங்கவும் சோறின்றித்
தத்தளிப்போர்கெதி என்ன மச்சான்?

ஆண்:

நாட்டில்-
எங்கும் தொழிலாளர் கூட்டமடி - அவர்
பங்காளி போன்றோரைக் காப்பாரடி

பெண்:

ஏழைகள் ஒன்றாய் இணைந்து விட்டால் - இங்கு
எஞ்சியுள்ளோர் நிலை என்ன மச்சான்?

ஆண்:

சில-
பேழை வயிற்றுப் பெருச்சாளிகள் - எதிர்
காலத்தை எண்ணித் தெளிவாரடி

பெண்:

நாளை விடிஞ்சாப் பெரும் பொங்கல் - அதில்
நாமும் கலந்திட வேணும் மச்சான்

ஆண்:

மிக-
நல்லது வள்ளி கலந்திடுவோம் - புது
நாளினை எண்ணி வணங்கிடுவோம்

இருவர்:

வல்லமையாலே வளம் பெறுவோம் - பசித்
தொல்லை அகலத் தொழில் புரிவோம்!

 

Read More! Learn More!

Sootradhar